CRIME
போலீசா..? திருடனா..? லாரி கேபினில் கைவரிசை காட்டிய எஸ்.ஐ… நடுரோட்டில் வெளுத்து வாங்கிய லாரி டிரைவர்..! வைரலாகும் பகீர் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனா பாலம் அருகே நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதம்பூர் பகுதியில் பணியமர்த்தப்பட்ட கிரீஷ் மிஸ்ரா என்ற சப்-இன்ஸ்பெக்டர், ஹமீர்பூர் செல்வதற்காக ஒரு லாரியில் ஏறியுள்ளார். அப்போது, லாரியின் கேபினில் வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாய் பணத்தை அந்த சப்-இன்ஸ்பெக்டர் திருடிவிட்டதாக லாரி ஓட்டுநரான மகேஷ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் காணாமல் போனதை உணர்ந்த ஓட்டுநர் மகேஷ், உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு சப்-இன்ஸ்பெக்டரை மடக்கிப் பிடித்துள்ளார். மேலும், அந்த சப்-இன்ஸ்பெக்டரின் சீருடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தனது 20,000 ரூபாய் பணத்தை ஓட்டுநர் மீட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது நடுரோட்டிலேயே கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ஓட்டுநர் சப்-இன்ஸ்பெக்டரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரைத் தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அது வேகமாக வைரலானது.
நெடுஞ்சாலையில் நடந்த இந்த மோதலைக் கண்டு கூடிய பொதுமக்கள், இருவரையும் சமாதானப்படுத்தி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சப்-இன்ஸ்பெக்டரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கிரீஷ் மிஸ்ராவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஓட்டுநரின் புகார் மற்றும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
