LATEST NEWS
அதிர்ச்சி..! “5 வயது குழந்தை கையில் மது பாட்டில்” ஆட்சி மாறினாலும் எதுவுமே மாறலையே… ஃபேக் வீடியோவால் கதறிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம்..!!
விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணையதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மிகுந்த மனவேதனையுடன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, 5 வயதுக் குழந்தையின் கையில் ஒரு மது பாட்டிலைக் கொடுத்து போலியான வீடியோவை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். இது தன்னை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும், பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இந்த கொடூரச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட அதிமுகவில் தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உழைக்கும் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதாகச் சாடியுள்ளார். தனக்கும் எடப்பாடிக்கும் கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெண்களைத் தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நபர்களைத் தலைமை ஊக்குவிப்பது போல் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக உள்ளிட்ட எந்தவொரு மாற்று கட்சியும் குடும்பப் பெண்களை இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து நடத்தியதில்லை என்றும் அதிமுகவின் தற்போதைய நிலை மோசம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் புதிய முதலமைச்சர் பெண்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாலும், கீழ்மட்ட அளவில் காவல்துறை இன்னும் மாறவில்லை என்று சி.வி. சண்முகம் சாடியுள்ளார். “ஆட்சி மாறிவிட்ட போதிலும் காட்சி மாறவில்லை” எனக் குறிப்பிட்ட அவர், இந்த அவதூறு வீடியோக்கள் தொடர்பாகச் செஞ்சி மற்றும் விழுப்புரம் காவல் நிலையங்களில் பலமுறை புகாரளித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
