CRIME
பகீர்..! விடுமுறையில் வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்… பூட்டிய அறைக்குள் கேட்ட அந்த ஒரு சத்தம்… பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள கஜூரி ரோடு பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் சோஹன் சிங் சிகர்வார் என்பவருக்கும், அவரது 30 வயதான மனைவி ராணி சிகர்வாருக்கும் இடையே பூட்டிய அறைக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த சோஹன் சிங் தனது கைப்பாஸ்டலை எடுத்து மனைவியின் தலையில் சுட்டார். இதில் படுகாயமடைந்த ராணி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, சோஹன் சிங் படுகாயமடைந்த மனைவியை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண் இறந்துவிட்டதாகத் தெரிவித்ததும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தொழில்நுட்ப சான்றுகளின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் தப்பி ஓடிய ராணுவ வீரர் சோஹன் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது சட்டவிரோதமானதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சோஹன் சிங்கின் தந்தை நரோத்தம் சிகர்வார் மற்றும் தாய் முன்னி தேவி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறே இந்த கொடூர குற்றத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும், சம்பவம் நடந்த சூழல் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
