CRIME
“434 மார்க் வாங்கிட்டா பெரிய கொம்பனா நீ..?” மாணவர்கள் முன் கன்னத்தில் அறைந்து அசிங்கப்படுத்திய ஆசிரியை… யாரையும் இனி இப்படி பண்ணாதீங்க பிளீஸ் என கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை…!!
“434 மார்க் வாங்கிட்டா பெரிய கொம்பனா நீ?!” என்ற பெண் விரிவுரையாளரின் அவமதிப்பு பேச்சால் மனமுடைந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கட்வால் அரசு கல்லூரியில் இடைநிலை இரண்டாமாண்டு படித்து வந்த கொத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நெட்டிபொட்டு தருண் (17) என்ற மாணவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். தருண் முதலாமாண்டு தேர்வில் 440-க்கு 434 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த திறமையான மாணவர் ஆவார்.
435 மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவருடன் ஒப்பிட்டுப் பேசி, அந்தப் பெண் விரிவுரையாளர் தருணை வகுப்பறையில் வைத்து கடுமையாக அவமதித்துள்ளார். “என்னை இப்படி அவமானப்படுத்துவது சரியல்ல” என்று தருண் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், “நீ என்ன அமைச்சரின் மகனா, அவ்ளோ பெரிய ஆளா நீ?” என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்து மேலும் அசிங்கப்படுத்தியுள்ளார். இதைக் கண்டு வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்களும் சிரிக்கவே, தருண் பெரும் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளானார்.
செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தீவிர மனவேதனையில் இருந்த தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். “ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவமானப்படுத்தக் கூடாது; ஒரு உணர்வுள்ள மனம் அவமானப்படுத்தப்படும்போது எவ்வளவு வேதனைப்படும் என்பதை அவர் உணர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்த தருண், தன் மரணத்திற்கு காரணமான அந்த விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது அனைவருக்கும் தெரியவர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் தனது கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.
