LATEST NEWS
அதிமுகவில் பயங்கர கோஷ்டி மோதல்..! கார் கண்ணாடி நொறுக்கம்… முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற அதிமுக உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் கோஷ்டி மோதல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வல்லம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி அங்கு வந்தபோது, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் அவருக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்குக் கோஷ்டி மோதலாகவும் வன்முறையாகவும் மாறியது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, மாவட்டச் செயலாளர் பசுபதியின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், அவரை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் அளித்த புகார்களின் பேரில், செஞ்சி போலீசார் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் பசுபதி தரப்பு அளித்த புகாரின்படி, கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் கல்வீசித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
