LATEST NEWS
“என்னை டீச்சர் தான் அடிச்சாரு…” சக மாணவி மீது புகார்… ஆத்திரத்தில் கை உடையும் அளவிற்கு அடித்து நொறுக்கிய ஆசிரியர்… சாவதற்கு முன் உயிருக்குப் போராடியபடி 8-ஆம் வகுப்பு மாணவி பேசிய பகீர் வீடியோ…! கதறும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பர்கானி பிளாக் சாஹுவாபூர் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி க்ஷமா தீட்சித், சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சக மாணவியுடன் ஏற்பட்ட தகராறு குறித்து ஆசிரியர் ராஜேந்திர குமார் கங்வாரிடம் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 26 அன்று பருக்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாணவி, சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 30 அன்று உயிரிழந்தார்.
மாணவி உயிரிழப்பதற்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், “ஆசிரியர் என்னை அடித்தார்” என்றும், தாக்குதல் நடந்த விதம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மாணவியின் தந்தை உமேஷ் தீட்சித், சம்பவம் நடந்தபோது பள்ளிக்குச் சென்றதாகவும், ஆசிரியர் தொடக்கத்தில் சிகிச்சைக்கு உறுதியளித்துவிட்டு பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முறையான விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கல்வித் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் அக்சத் மற்றும் உதவி ஆசிரியர் ராஜேந்திர குமார் கங்வார் ஆகிய இருவரையும் உடனடியாக பணிநீக்கம் (Suspension) செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைக்காகக் காவல்துறையினர் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் மற்றும் மாணவியின் வைரல் வீடியோ, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புக்கூறல் குறித்த தீவிரக் கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.
