CRIME
“இப்படிப்பட்ட கல்யாண வாழ்க்கைக்கு சாவதே மேல்” காதலித்து கல்யாணம் செஞ்சும் சந்தோசம் இல்ல… தற்கொலை செய்துகொண்ட சப்-இன்ஸ்பெக்டர்..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் நவ்காச்சியாவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த யோகேஷ் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கின் விசாரணையில், அவரது அறையிலிருந்த ஒரு புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “இப்படிப்பட்ட ஒரு திருமண வாழ்க்கையை வாழ்வதை விட மரணத்தைத் தழுவுவதே மேல்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக நவ்காச்சியா காவல்துறை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகவே அவர் இந்த சோகமான முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பீகாரின் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் யோகேஷ் குமார், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த குடியா என்ற பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தான் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடியாவிற்கும் அரசு வேலை கிடைத்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது திருமண வாழ்க்கையில், சில காலத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உறவில் கடுமையான விரிசல் உண்டானதாக யோகேஷின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
யோகேஷின் சகோதரி மற்றும் உறவினர்கள், திருமணத்திற்குப் பிறகு குடியா யோகேஷிடம் முறையாகப் பேசுவதில்லை என்றும், அவரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, கடந்த துர்கா பூஜையின் போது நவ்காச்சியாவிற்கு வந்த குடியா இரண்டு நாட்களில் அங்கிருந்து சென்ற பிறகு, யோகேஷ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது யோகேஷின் மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு முன்பாக அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்தும், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணங்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
