LATEST NEWS
. திக் திக் நிமிடங்கள்..! நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடிப்பு.. 18 பேர் பலி, 24 பேரின் நிலை என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தென்மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவின் புறநகர் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மீத்தேன் வாயு தேங்கியதால் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், குறைந்தது 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் அவசரக்கால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீத்தேன் வாயு வெடிப்பின் காரணமாக சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் அளவு பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டதால், மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் தங்களின் அன்பிற்குரியவர்களின் தகவலுக்காக பெரும் பதற்றத்துடன் காத்திருக்கும் சூழலில், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மிகக் கடினமான சூழலில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் மாகாண சுரங்கத் துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் மாகாண அரசு சார்பில் 5,00,000 பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
