LATEST NEWS
“என் அரசியல் வாழ்க்கையில் செய்த 2 மாபெரும் பிழைகள்!”.. முதன்முறையாக ஓப்பனாக ரகசியத்தை உடைத்த வைகோ.. அரசியலில் திடீர் பரபரப்பு..!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1993-ஆம் ஆண்டின் நினைவுகள் மற்றும் தனது அரசியல் பிழைகளை விவரித்துத் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 1993-இல் குமரி மாவட்டம் முழுவதும் தனது போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் கலைஞர் கருணாநிதி பொதுக்கூட்டத்தையே ரத்து செய்ய முயன்றதையும், அனுமன் நெஞ்சில் ராமன் இருந்தது போல தன் நெஞ்சில் கலைஞர் கொலுவீற்றிருக்கிறார் என்று தான் பேசியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், அன்று தன் மீது கொலைப்பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கிய தலைமை, தற்போதும் அவதூறுகளைப் பரப்புவதாகவும், நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டும் ஒதுக்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தங்களுக்குக் கட்டாயத் திணிப்பை ஏற்படுத்தியதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னுடைய நீண்ட கால அரசியல் பயணத்தில் எடுத்த இரு தவறான முடிவுகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தக் கடிதத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு நிர்வாகிகளின் கட்டாயத்தால் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை முதல் தவறாகவும், 2017ஆம் ஆண்டு பாஜகவை எதிர்க்கும் நோக்கில் திமுகவுடன் கூட்டணி அமைத்ததை இரண்டாவது தவறாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று அந்த முடிவுகளைத் தவிர்த்திருந்தால் கட்சியின் வளர்ச்சி வேறாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கட்சி சரியான பாதையில்தான் செல்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், சரிவுகளில் இருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவை போல, இனிவரும் காலங்களில் தமிழக அரசியலில் மதிமுக கம்பீரமாகத் தடம் பதிக்கும் என்றும், தங்களுக்குத் தோல்வியே இல்லை என்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
