LATEST NEWS
காலையிலேயே பயங்கரம்..! தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை… சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை வண்ணாந்துறையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி கண்ணன் என்ற நபர், இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கர கொலைச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொடூரக் கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமாகவே அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட கண்ணன், சமீபத்தில் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
