LATEST NEWS
“நிறுத்துங்கடா கல்யாணத்தை!”.. ஒரே நாளில் 390 புகார்கள்.. அடுத்தடுத்து சிக்கிய 8 குழந்தை திருமணங்கள்.. அதிரடியாக களத்தில் இறங்கிய சிங்கப்பெண் படை..!!
தமிழ்நாட்டில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற எண்ணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் அடங்கிய ‘சிங்கப்பெண்’ படை தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரகசியமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 8 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் தங்களின் அதிரடிப் பாய்ச்சல் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளனர். சமூக நலத்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் ‘181’, ‘1098’ ஆகிய அவசர உதவி எண்களுக்கு ஒரே நாளில் 390-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், உடனடியாகக் களமிறங்கிய பறக்கும் படையினர் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளுக்குத் திடீரெனச் சென்று இந்த ஸ்பாட் ஆக்ஷன் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சட்டவிரோதத் திருமணங்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 18 வயது பூர்த்தியடையாத 8 சிறுமிகளும் சிறுவர் சீர்திருத்தக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் மேற்படிப்பைத் தொடரவும் உரிய ஆலோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்துச் சமூக நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கிரிமினல் வழக்குகள் பாயும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி 181 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே அதிகாரிகள் உதவிக்கு வருவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
