LATEST NEWS
“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்களைக் கொன்றுவிட்டு.. ஆணவத்தோடு பேசுவதா..?” கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு சீமான் கடும் கண்டனம்..!!
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்றும், தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையைக் கேட்கும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு தமிழர்களைத் தாக்குவதன் நீட்சியாகவே, மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக் கூடாது எனக் கூறும் சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாது எனச் சொல்வதற்கான உரிமையோ, துணிவோ யார் கொடுத்தது என்றும், தமிழ்நாட்டின் சனநாயகத் தன்மையை ஏமாளித்தனம் எனக் கருதினால் அதற்கான பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலப் பேசுவதைக் கைவிட்டு கர்நாடக முதல்வர் நாவடக்கிப் பேச வேண்டும் எனக் கூறியுள்ள அவர், தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும் என்றும், அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வருக்கு எந்த உரிமையுமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மூன்று அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இதற்கு கர்நாடக அரசுக்குத் தேவையான அரசியல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் தமிழ்நாட்டை ஆளும் அரசு கொடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
