LATEST NEWS
“ஐ லவ் யூ…! கம்ப்ளைன்ட் பண்ணுவியா..? பண்ணிக்கோ…” பெண்ணை மிரட்டிய ரேபிடோ ரைடர்… பகிரங்க மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!!
நொய்டாவில் ரேபிடோ நிறுவனத்தின் பார்சல் டெலிவரி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவருக்கு, அச்சேவையை வழங்கிய ரைடர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் டெலிவரி செய்து முடித்த பிறகு, அந்த நபரிடமிருந்து “ஹலோ, எப்படி இருக்கீங்க?” என்று மெசேஜ் வந்துள்ளது. அதன்பின் சில நிமிடங்களிலேயே, நேரடியாக “ஐ லவ் யூ” என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ரைடரின் இந்த தவறான நடத்தையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனக்கு மீண்டும் அழைப்போ அல்லது மெசேஜோ அனுப்பினால் காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்துள்ளார். ஆனால், அதற்கு அந்த ரைடர் எவ்வித பயமும் இல்லாமல், “யார்கிட்ட வேணா புகார் பண்ணுங்க, ரேபிடோ நிறுவனத்துலயும் போய் புகார் பண்ணுங்க” என்று சவாலாகப் பதில் அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், அந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தன் பாதுகாப்புக் கவலையை எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வைரலாகப் பரவியதை அடுத்து, ரேபிடோ நிறுவனம் அந்தப் பெண்ணின் பதிவிற்குப் பதிலளித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய அந்நிறுவனம், சம்பந்தப்பட்ட ரைடரின் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து முறைப்படியான புகார் கிடைக்கும் பட்சத்தில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நோய்டா காவல் துறையும் தெரிவிப்பதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
