CRIME
“யாருமா நீங்க..?” வாயிலேயே நகைகளை அமுக்கிய 5 பெண்கள்.. நகைக் கடையை மொட்டையடித்த லேடீஸ் கேங்.. வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சந்த்பூர் சந்தையிலுள்ள நகைக்கடை ஒன்றில், திருமணத்திற்கு நகை வாங்குவது போல நடித்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் அடங்கிய கும்பல், கடைக் காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பி சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் தங்கள் வாய்க்குள் மறைத்து வைத்து நூதன முறையில் திருடிச் சென்றுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சந்த்பூரிலிருந்து காசியாபாத் வரை உள்ள பாதையிலிருந்த நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்த காவற்துறையினர், திருட்டுக் கும்பல் இரண்டு கார்களில் தப்பிச் சென்றதை லாவகமாகக் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து காசியாபாத் பகுதியில் மறைந்திருந்த ஜாஹிதா, ஆஷியா, பரீத் கான் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட அந்தத் திருட்டுக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜாஹிதாவிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் திருமண விழாவில் தாய்வழி சீதனமாக வழங்கப்படும் ‘பாத்’ என்ற பாரம்பரியப் பரிசை அளிப்பதற்காகவும், நகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்தக் கும்பல் இதே பாணியில் பிற மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் பல்வேறு நகைக்கடைகளைக் குறிவைத்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
