CRIME
“இந்த கிழவி தொல்லை தாங்க முடியல” காதலுக்கு தடையாக இருந்த பாட்டி… தலையணையை வைத்து அமுக்கி கொன்ற மைனர் பேத்தி.. காதலனுடன் சேர்ந்து நடத்திய பயங்கரம்..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர். பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில், 52 வயதான மகாதேவம்மா என்ற பெண் அவரது மைனர் பேத்தியால், காதலன் ஆகாஷ் என்பவரின் உதவியோடு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட அந்தப் பெண் ஆகாஷ் என்பவருடன் காதலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சிறுவயதில் காதலில் ஈடுபடாமல் கல்வி மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்துமாறு மகாதேவம்மா தனது பேத்திக்கு அறிவுரை கூறியதே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தனது பாட்டியின் அறிவுரையைத் தங்களது காதலுக்கு வந்த இடையூறாகக் கருதிய அந்தப் பெண், காதலன் ஆகாஷுடன் இணைந்து பாட்டியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட இருவரும், உறங்கிக் கொண்டிருந்த மகாதேவம்மாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி மூச்சுத் திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, தனக்கு எதுவுமே தெரியாதது போல் அந்தப் பேத்தி வீட்டில் நாடகமாடியுள்ளார்.
மகாதேவம்மாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, மாண்டியா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஷோபாராணி வழிகாட்டுதலின் கீழ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேத்தி மீது சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலைச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள காதலன் ஆகாஷைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்ப உறவுகளுக்கு இடையே நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
