LATEST NEWS
“ஈகோக்களை தூக்கிப் போடுங்க.. அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது..!” சசிகலா போட்ட அணு குண்டு பதிவு.. தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனை..!!
அகில இந்திய புரட்சித் தலைவி கழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் எதிர்கால வியூகம் குறித்து மிக முக்கியமானதொரு பதிவை வெளியிட்டுள்ளார். “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று தனது பதிவின் மூலம் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ள அவர், கடந்த காலக் கசப்புகளையும் கருத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதில் ஆழமாக வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக-வின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள அவர், “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்; இதற்கு மேலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார். சுயநலப் போக்குகளால் இயக்கம் பலவீனமடைவதைத் தடுக்கவும், தொண்டர்களின் உழைப்பால் உருவான இந்த அரசியல் சக்தியைக் கட்டிக்காக்கவும் அனைத்துத் தரப்பினரும் தங்களின் ஈகோக்களைத் துறந்து உடனடியாக ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் தனது பதிவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
