LATEST NEWS
“அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவோம்”.. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி விடுத்த நடுக்க வைக்கும் மிரட்டல்…!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழலை உருவாக்கும் வகையில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமையவிருக்கும் ‘தர்கோவின்’ அணுமின் நிலையத் திட்டம் மற்றும் அதன் தெற்கு மாகாணங்களை இணைக்கும் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்க விமானப்படை பயங்கரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தொடர் குண்டுவீச்சுகளால் ஈரானின் தெற்குப் பகுதிகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு மருத்துவமனைகளும் அவசரமாகக் காலி செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடியாகக் குவைத் மற்றும் பஹ்ரைனின் மின், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அண்டை நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைத் தன்வசப்படுத்தியுள்ள ஈரான், வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘மறக்க முடியாத பாடத்தை’ கற்பிப்போம் என்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி எச்சரித்துள்ள சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் மேலும் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதோடு 430க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க வீரர்களின் இந்த மரணம் மிகவும் துயரமளிப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
