LATEST NEWS
“தவெகவை பாத்து கத்துக்கோங்க!” அதிமுக ஐடி விங் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபம்… இனி ‘AI’ தெரிந்த புதிய ரத்தங்களுக்கு மட்டுமே பதவி..!!
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கட்சியின் ஐடி விங் (IT Wing) செயல்பாடுகள் குறித்து அவர் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்பிஆர் மாளிகையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சமூக வலைதளங்களை மிகத் திறமையாகப் பயன்படுத்தியே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தவெக ஐடி விங்கின் வேகத்திற்கு இணையாக அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இனிவரும் காலங்களில் வெறும் கட்சிப் பரிந்துரைகள் அல்லது விசுவாசத்தின் அடிப்படையில் மட்டும் ஐடி விங்கில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்களை கையாளத் தெரிந்தவர்களுக்கும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் மட்டுமே டிஜிட்டல் அணியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அரசியல் பிரசாரங்களை வேகப்படுத்துவது மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாக டிஜிட்டல் வடிவில் பதிலடி கொடுக்கும் திறமை கொண்ட இளைஞர்களைப் பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும், தேர்தல் தோல்விக்கு ஐடி விங் மட்டுமல்லாமல் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி போன்ற பிற சார்பு அணிகளின் மந்தமான செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதால், ஒட்டுமொத்த சார்பு அமைப்புகளிலும் விரைவில் அதிரடி களையெடுப்பும் மறுசீரமைப்பும் இருக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க அனைவரும் இப்போதிலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி போன்ற முக்கிய நிர்வாகிகள் சிலர் பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
