LATEST NEWS
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க யாராவது இப்படி பண்ணுவாங்களா..? சாதாரண ஆளா இருந்தா இந்நேரம் ஜெயில்ல போட்டு இருப்பீங்களே… மாத்திரை vs போதைப்பொருள்’ சர்ச்சையில் சீமான் அதிரடி…!!
தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், கிரிக்கெட் மைதானத்தில் செல்போன் திரையில் இருந்த வெள்ளை நிறப் பொருளை ஏடிஎம் கார்டு கொண்டு கோடு கோடாகப் பொடியாக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த அமைச்சர், காய்ச்சலால் அவதிப்பட்ட தனது குழந்தைக்கு மாத்திரையை விழுங்க முடியாததால், அதை நசுக்கிப் பொடியாக்கித் தண்ணீரில் கலந்து கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அமைச்சரின் இந்த விளக்கத்தை முற்றிலுமாக மறுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “குழந்தைக்கு மாத்திரை கொடுக்க யாராவது செல்போன் திரையில் வைத்து ஏடிஎம் கார்டால் பொடியாக்குவார்களா?” என அதிரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளார். ஐபிஎல் போட்டியைப் பார்க்கச் சென்ற இடத்தில் குழந்தைக்கு மாத்திரை ஊட்டுவதற்காக இப்படிச் செய்ததாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் கதை என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரே இப்படி நடந்துகொள்வது சமூகத்திற்கு ஆபத்தானது என்றும், இதுவே ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்தால் காவல்துறை சும்மா விட்டிருக்குமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். அமைச்சராக இருப்பதால் மட்டும் சலுகை காட்டக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் இணைந்து வீடியோ மூலம் விளக்கம் அளித்தபோதிலும், அரசியல் களத்தில் விமர்சனக் கணைகள் குறைந்தபாடில்லை. இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் இந்த ‘மாத்திரை vs போதைப்பொருள்’ சர்ச்சை மேலும் சூடுபிடித்துள்ளது.
