CRIME
“அம்மா.. அம்மா..” என்று கூப்பிட்டு துண்டிக்கப்பட்ட போன்.. அடுத்த சில நிமிடங்களில் விடுதியில் பிணமாக மீட்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவி.. என் மகள் சொன்ன 3 விஷயம்… உண்மையை உடைத்த தந்தை..!
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்-மகாலட்சுமி தம்பதியரின் மூத்த மகளான அந்த மாணவி, பெற்றோர் சென்னை கீழ்க்கட்டளையில் வசித்து வந்ததால் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 6 மணியளவில் தனது தாயைத் தொலைபேசியில் அழைத்து “அம்மா.. அம்மா..” என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த மாணவி, அடுத்த சில நிமிடங்களிலேயே விடுதி அறையில் தூக்கிட்டுள்ளார்.
காலை 8 மணியளவில் விடுதி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடற்கூறாய்வு செய்ய உடலை அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தாளாளரைக் கைது செய்ய வலியுறுத்தியும் விசிக மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்துக் கண்ணீருடன் பேசிய மாணவியின் தந்தை கார்த்திக், “அது நல்ல பள்ளி கிடையாது, என் மகள் ஏற்கனவே அங்கு நடந்த மூன்று விஷயங்களை என்னிடம் கூறினாள், நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்; என் மகள் மரணத்திற்கு முழு விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார். தற்பொழுது மாவட்ட எஸ்பி (SP) அவர்கள் பள்ளி மற்றும் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளதுடன், நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
