LATEST NEWS
“நம்மிடம் 100 எம்பி-க்கள் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது..!” சட்டப்பேரவையில் மிரள வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிரடிப் பேச்சு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கு இன்று வரை தொடர்வதைச் சுட்டிக்காட்டியதுடன், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி வழியில் மாநில சுயாட்சிக்காகத் தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு எதிராகவே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொகுதி மறுவரையறை செயல்படுத்தப்பட்டால் அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்திய அரசியல் தலைகீழாக மாறிவிடும் என்று எச்சரித்த அவர், இதன் மூலம் வட இந்தியாவின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கும் என்றார். தமிழ்நாட்டில் 50 சதவீத தொகுதிகள் அதிகரித்தாலும் நாடாளுமன்றத்தில் வட மாநிலங்களின் ஆதிக்கமே செலுத்தும் என்பதால், இந்தத் தீர்மானம் நீட் தேர்வை விட மிகவும் முக்கியமான ஒன்று என வலியுறுத்தினார். நமக்கென 100 எம்பி-க்கள் இருந்திருந்தால் நீட் மற்றும் ஜி.எஸ்.டி போன்ற சட்டங்கள் வந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543-ஐ நிரந்தரமாக்க வேண்டும் என்பதே தங்களது தீர்மானம் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த விவகாரத்தில் கட்சிகளைக் கடந்து அனைவரும் தமிழராக ஒன்றிணைய வேண்டும் என்றார். மேலும், எதிர்காலத்தில் மத்திய அரசு இது தொடர்பான சட்டம் கொண்டுவரும்போது, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தீவிரமாக வலியுறுத்தினார்.
