LATEST NEWS
பகீர்..! பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்… காற்றில் பறந்து லாரி மீது மோதிய எலக்ட்ரிக் கார்..! நொடிப் பொழுதில் பறிபோன 2 உயிர்கள்..! நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக எலக்ட்ரிக் காரில் சென்ற மூன்று இளைஞர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது. நாக்பூரின் கலம்னா காவல் எல்லைக்குட்பட்ட பரத்வாடா சௌக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி தரும் விபத்து சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, அதிவேகமாக வந்த எலக்ட்ரிக் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முதலில் சாலையோர நடைபாதையில் மோதி காற்றில் எழும்பி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து முற்றிலும் உருக்குலைந்தது. இதில் காரில் பயணித்த பௌமிக் அமோல் லாரோகர் மற்றும் சாகர் மேல்வானி ஆகிய இரு இளைஞர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த மிஹிர் ஆனந்த் பெஹார் என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார்.
சப்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கும் ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கலம்னா காவல் துறையினர், காரில் சிக்கியவர்களை மீட்டு உயிரிழந்த இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மிஹிர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காரின் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படும் நிலையில், காரில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா அல்லது ஓட்டுநருக்குத் தூக்கக் கலக்கம் இருந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
