“புழல் சிறைக்கு போய் பார்த்தது சரிதான்… ஆனா வெறும் போட்டோ ஷூட்டோடு முடிஞ்சிடக் கூடாது..!” முதலமைச்சர் விஜய்யின் திடீர் சிறை ஆய்வை விளாசிய வேல்முருகன்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“புழல் சிறைக்கு போய் பார்த்தது சரிதான்… ஆனா வெறும் போட்டோ ஷூட்டோடு முடிஞ்சிடக் கூடாது..!” முதலமைச்சர் விஜய்யின் திடீர் சிறை ஆய்வை விளாசிய வேல்முருகன்…!!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அந்தச் சிறைக்குள் நீண்டகாலமாக வாடும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு வழிவகுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், விசாரணை முடிவடையாமலேயே பல ஆண்டுகள் சிறையில் கழிப்பது அந்த மனிதரின் வாழ்க்கையில் மறைமுகத் தண்டனையாக மாறுகிறது என்பதால், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் மற்றும் விடுதலைக்கான தகுதிகளை பாரபட்சமின்றி மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய சுயாதீன மறுபரிசீலனை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனவும், நீண்டகாலமாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களின் நிலையும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தண்டனையின் நோக்கம் நிறைவேறிய பின்னரும் சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல என்பதால், விடுதலை பெறுபவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முழுமையான மறுவாழ்வுத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் நேரில் பார்த்த நிலைமைகள் வெறும் அரசு கோப்புகளாக முடங்காமல் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுகளாக மாற வேண்டும் என்றும், இந்த ஆய்வை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கடந்து செல்லாமல் நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதலமைச்சர் மாற்ற வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in