LATEST NEWS
“எனக்கு மேயர் பதவி வேணும்!” தவெகவிடம் கண்டிஷன் போட்ட கயல்விழி.. தவெகவில் இணையும் முன்பே அடியா..? செக் வைத்த விஜய்.. செம கடுப்பில் அழகிரி..!!
திமுக தலைமை மீது மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், திமுக தரப்பு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனிடையே அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் நகரத் தொடங்கினர். இந்தச் சூழலில், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கயல்விழி, தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் அவர் விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்தது.
ஆனால், தவெகவில் இணைவதற்கு முன்பாக கயல்விழி வைத்த மிகப்பெரிய நிபந்தனை அக்கட்சியின் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தான் கட்சியில் இணையும் பட்சத்தில், மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக குடும்பத்தின் முக்கிய வாரிசு ஒருவர் இணைவது கட்சிக்குப் பலமாக இருக்கும் என்று பேச்சுவார்த்தை தொடங்கிய சூழலில், ஆரம்பத்திலேயே அவர் மேயர் பதவியைக் கேட்டதை நிர்வாகிகள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரம் தவெக தலைவர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, “கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்கே பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்; நிபந்தனை கொடுத்து யாரையும் சேர்க்க வேண்டியதில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்தத் தீர்க்கமான முடிவால் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகிகள் பின்வாங்க, அழகிரி தரப்பு கடும் அப்செட்டில் உள்ளது. இதனால் கயல்விழி தவெகவில் இணைவது கேள்விக்குறியாகியுள்ளது.
மற்றொரு புறம், மதுரையின் புதிய பவர் சென்டராக உருவெடுத்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளரான மருதுபாண்டியனை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டு வருகிறார். நிர்மல்குமாரின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைத்த மருதுபாண்டியனைக் கொண்டுவர அத்தரப்பு காய்நகர்த்தி வருகிறது. இதன் மூலம், கயல்விழி வைத்த மேயர் கோரிக்கையே அவருக்குப் பெரும் பின்னடைவாகத் திரும்பிவிட்டது.
