LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! விஜய் கர்நாடகா செல்லும் அதே நாளில் செக் வைக்கும் ஸ்டாலின்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்றது முதலே, மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் தமிழக முதலமைச்சர் விஜய் இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகவும் திமுக சாடியுள்ளது.
தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் எவ்வித சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சுயநலத்திற்காகவே முதலமைச்சர் விஜய் இந்த முக்கியப் பிரச்சினையில் அமைதி காப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைச் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இவ்விவகாரத்தில் தவெக அரசுக்கு எந்தவொரு தெளிவோ வெளிப்படைத்தன்மையோ இல்லை என்று விமர்சித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்லவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற முடியாது என கர்நாடக முதலமைச்சர் மறுத்த பிறகும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேகதாது விவகாரம் மட்டுமின்றி, தற்போதைய தவெக ஆட்சியில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் திமுக கவலை தெரிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம், பயிர்க் காப்பீட்டு பிரீமியம் தொகையை அரசே செலுத்துதல் மற்றும் சம்பா சாகுபடிக்கான மானிய இடுபொருட்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த முதல்கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், அடுத்து வரும் நாட்களில் இதைவிடப் பெரிய அளவிலான போராட்டங்களை திமுக முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
