CRIME
பகீர்!.. லுங்கியால் கை, கால்களை கட்டி கொடூர தாக்குதல்.. சிறையில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை.. சிபிசிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பங்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் எனக் கூறிச் சிறையில் சபரிவர்மன் சத்தம் போட்டதால், ஆத்திரமடைந்த சிறை வார்டன் அவரைத் தாக்கியுள்ளார். அதன்பின்னரும் அவர் சத்தம் போடவே, வார்டன்களின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த 8 கைதிகள் லுங்கியால் சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, தென்மண்டல கண்காணிப்பாளர் ஷாஜிதா தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறை வார்டன்கள் நாங்குநேரி சிறையிலும், 8 கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் சிபிசிஐடி போலிஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உண்மைகளை முழுமையாக வெளியே கொண்டுவர இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
