CRIME
“பெற்றோர்களே உஷார்… 2 ஆண்டுகள் சிறை..!” 18 வயதுக்கு முன் திருமணம் செய்து வைத்தால் என்ன நடக்கும்..? ஆட்சியரின் சாட்டையடி எச்சரிக்கை..!!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்தும், இளம் வயது கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்தும் முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாக மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்குத் தொடர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் திருமணத் தரகர்களிடம் குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்து உரிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வளரிளம் பருவத்தில் கர்ப்பம் அடைவது பெண் குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாகும். சிறிய வயதில் கர்ப்பமாவதால் பெண்களுக்கு இரத்தம் சோகை, உயர் இரத்த அழுத்தம், தடைபட்ட பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறத்தல் மற்றும் மகப்பேறு மரணம் போன்ற பல்வேறு மருத்துவச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, 18 வயதிற்கு முன்பாக பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதுடன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுடன் திறந்த மனதுடன் பேசி அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒருவேளை வளரிளம் பெண்கள் கர்ப்பம் தரித்தால், அதுகுறித்த தகவலை உடனடியாக ‘1098’ என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால கர்ப்பமாக இருந்தால் மருத்துவக் கல்லூரி மூலம் உரிய ஆலோசனைகளும், முழு கால கர்ப்பமாக இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சைக்குப் பின் குழந்தையைக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். “இளம் வயது கர்ப்பதைத் தடுப்போம்; பெண் குழந்தைகளின் கல்வியையும், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
