LATEST NEWS
“அவங்க சாதாரண ஆளுங்க இல்லை… தூய்மை தேவதைகள்..!” செப்.15-க்குள் வரப்போகும் செம்ம சர்ப்ரைஸ்… சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!
தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப் பின் கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி-சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக நடைபெற்ற வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து உரையாற்றினர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் வெறும் தூய்மை ஊழியர்கள் அல்ல; தூய்மை தேவதைகள். போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் பிரயோகிக்கக் கூடாது என காவல்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், பணியின்போது உயிரழந்த தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, கழிப்பிடம் மற்றும் உடை மாற்றும் அறைகள் வரும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கையுறைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். காலை சிற்றுண்டிக்கு பதிலாக உணவுப்படி வழங்குவது, வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் முதல்வரை சந்திப்பது தொடர்பாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறிய அவர், சிறப்பு முகாம்கள் நடத்தி தூய்மைப் பணியாளர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
