CRIME
“என் அக்காவை கொன்னுட்டேன்..! தூங்கிங் கொண்டிருந்த இரண்டு சகோதரிகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தம்பி..! மூடநம்பிக்கையால் நடந்த பகீர் சம்பவம்..!!
ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள பாபைதா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கொலையாளி தனது இரண்டு சகோதரிகளையும் கோடாரியால் தாக்கி கொன்றுவிட்டு, தப்பியோடாமல் நேரடியாக தால்பும்ஹர் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார். உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளி ஸ்வரூப் டுடு என்ற சின்டூ கடந்த சில நாட்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் குணமாகாததால், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டிற்கு ஒரு மாந்திரீகரை அழைத்துள்ளார். அவரது அழைப்பின் பேரில் அவரது மூத்த சகோதரிகளான துலாரி சோரேன் (55) மற்றும் லட்சுமி மாண்டி (50) ஆகியோரும் வீட்டிற்கு வந்துள்ளனர். இரவில் வீட்டில் மாந்திரீக மற்றும் பூசாரி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. சடங்குகள் முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் தூங்குவதற்காக அறைக்குச் சென்றனர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, ஸ்வரூப் கோடாரியால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
கொலை நடந்த பிறகு, ஸ்வரூப் நேராக காவல் நிலையம் சென்று தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தால்பும்ஹர் போலீசார், இரு பெண்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரியையும் பறிமுதல் செய்தனர். மூடநம்பிக்கை காரணமாகவே இந்த இரட்டை கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கொலையின் உண்மையான பின்னணி குறித்தும் அனைத்து கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
