LATEST NEWS
“முதல்வர் அறையை மாற்றுவது எதற்காக..?” எ.வ.வேலு எழுப்பிய கேள்வி.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனனின் பகீர் விளக்கத்தால் அதிர்ந்த சபை..!!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. எ.வ.வேலு பங்கேற்றுப் பேசும்போது, முந்தைய முதல்வர்கள் பயன்படுத்திய அறையை மாற்றுவது எதற்காக என்ற கேள்வியை எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல முக்கிய திட்டங்கள் அதே அறையில்தான் உருவாக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்வதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், அங்கே சென்றால் அரசு அலுவலர்கள் உணவு அருந்துவது உள்ளிட்ட சில அத்தியாவசியச் சிரமங்கள் ஏற்படும் என்று தனது கவலைகளைப் பதிவு செய்தார்.
இந்த வாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எ.வ.வேலுவின் பேச்சு மக்களுக்கு எதிரான தோற்றத்தை மறைத்து மென்மையாகக் குற்றம் சாட்டும் வகையில் உள்ளதாக விமர்சித்தார். முதல்வர் தன் சொந்த வசதிக்காக அறையை மாற்றவில்லை என்றும், அவருடன் பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்களின் வசதிக்காகவும், தற்போதுள்ள அறையில் முறையான கழிப்பறை வசதி இல்லாததைக் கருத்தில்கொண்டுமே இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவர் விளக்கினார். மேலும், கடந்த காலப் பொதுப்பணித்துறை செயல்பாடுகள் மற்றும் டெண்டர்கள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
