LATEST NEWS
அமைச்சர் வன்னி அரசு கையை தட்டிவிட்ட திருமாவளவன்…? உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில்’ சுடர் ஏந்தும்போது, அமைச்சர் வன்னி அரசின் கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தட்டிவிட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, திருமாவளவன் சமீபகாலமாக பொறுமை இழந்து வருவதாகவும், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தவிர, மாநாட்டில் எதிர்பாராத அளவிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் மேடைக்கு முன்பும், சுற்றிலும் கடுமையான கூட்ட நெரிசலும், கட்டுப்பாடற்ற தள்ளுமுள்ளும் ஏற்பட்டன. மாநாட்டுப் பந்தலின் உயர் கூரைகள் மற்றும் இரும்புக் கம்பிகள் மீது தொண்டர்கள் ஆபத்தான முறையில் ஏறியதால் பரபரப்பு நிலவியதுடன், இந்த நெரிசலின் காரணமாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, திட்டமிடப்பட்டிருந்த தலைவர்களின் உரைகள் எதையும் அனுமதிக்காமல் திருமாவளவன் மாநாட்டைப் பாதியிலேயே முடித்து வைத்தார். அதே நேரத்தில், தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியுடன் விசிக இனி இணைந்து பயணிக்கும் என்றும், கூட்டணியை உறுதி செய்வதாகவும் இந்த மாநாட்டின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
