CRIME
பகீர்..! சாப்பிடக் கூப்பிட்டுச் சென்ற நபர் தலைமறைவு.. 2 நாட்களாகத் தேடப்பட்ட சிறுவர்கள் பிணமாகக் கண்டெடுப்பு… பின்னணியில் காதல் விவகாரமா..? சத்தர்பூரில் பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்கர் பகுதியைச் சேர்ந்த நரசிங் யாதவ் என்பவரின் மகன்களான சச்சின் யாதவ் மற்றும் பிரேம் யாதவ் ஆகிய இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மாயமாகினர். பள்ளி முடிந்தும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் பலனின்றிப் போனது. இதையடுத்து லவ்குஷ்கர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாலெந்திர சிங் என்ற நபர் சிறுவர்களைச் சாப்பிட அழைத்துச் சென்றதை அறிந்து போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கிராமத்தின் அருகே உள்ள ஒரு குழியில் இரண்டு சிறுவர்களின் உடல்களும் சடலமாக மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிராம மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் இருவரையும் கொன்று குழியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இதன் பின்னணியில் காதல் விவகாரம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான பாலெந்திர சிங்கைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
