CRIME
“7 லட்சம் கொடுங்கள்… அரசு வேலை பெறுங்கள்…!” போலி IAS விப்ரா சர்மா கும்பலின் மோசடி அம்பலம்… பல்கலைக்கழக எழுத்தரும் கூட்டு..! பரேலியில் நடந்த மாபெரும் கொள்ளை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தம்மை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வேலைதேடும் இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பலின் சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த கும்பலின் முதன்மை குற்றவாளியான விப்ரா சர்மா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சொகுசு காரில் நீல நிற விளக்குகளைப் பொருத்தித் திரிந்து, தாங்கள் பெரிய அதிகாரிகள் என மக்களிடம் கெத்து காட்டி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது இந்த மோசடி கும்பலுக்கு ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தின் எழுத்தர் தேவ்பிரகாஷ் என்பவரும் உடந்தையாக இருந்து உதவியிருப்பது தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்களைத் தொடர்புகொள்ளும் எழுத்தர் தேவ்பிரகாஷ், தனக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி விப்ரா சர்மாவைத் தெரியும் என்றும், அவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஷாஜகான்பூரைச் சேர்ந்த புஷ்பேந்திரா என்பவரிடம் வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விப்ராவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ரூ.7 லட்சமும், அரவிந்த் குமார் என்பவரிடம் ரூ.4 லட்சமும் வாங்கியுள்ளனர். பணம் பெற்ற பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி நியமனக் கடிதங்களை வழங்கி குறிப்பிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் நியமனக் கடிதத்தைக் காட்டிய பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை வேலைதேடுபவர்கள் உணர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், விப்ரா சர்மா, அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி மூலம் சேர்த்த சொத்துக்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பல்கலைக்கழக எழுத்தர் தேவ்பிரகாஷ் மீது ஏற்கனவே புகார்கள் இருந்தபோதிலும், பல்கலைக்கழக நிர்வாகம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தெரிவித்த பரேலி காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா, இந்த மோசடியில் தொடர்புடைய புதிய நபர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் எவரும் தப்பிக்க முடியாது என்றும் உறுதியளித்துள்ளார்.
