LATEST NEWS
“இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து” இதுதான் நாகரீகமா பாஸ்..? திமுக, தவெக இருதரப்பையும் வெளுத்து வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்..!!
தமிழகத்தின் தற்போதைய தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் சர்ச்சை பேச்சுக்களுக்கும் தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவெளியில் அரசியல் தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதாக வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார். கொள்கை விமர்சனங்களை விடுத்து தனிப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் பேசுவது சட்ட அத்துமீறல் என்றாலும், அவரைப் பலவந்தமாகக் கைது செய்யும் அளவிற்கான தீவிர நடவடிக்கையைக் காவல்துறை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
அதேவேளையில், தவெக தரப்பில் உள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்” எனப் பேசியதையும் சிபிஐ கண்டித்துள்ளது. இத்தகைய பேச்சுக்கள் அவர் வகிக்கும் அமைச்சர் பொறுப்பிற்கு எவ்வகையிலும் பெருமை சேர்க்காது என்றும், அரசியல் தளத்தில் அனைவரும் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேண வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
